தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராகப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உலகையே உலுக்கிய ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ (Epstein Files) பிரதமரைத் தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியதாகக் கூறி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால், இந்தப் புகாரின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
“அமைச்சர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திப் பிரதமரைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள பாஜகவினர், இந்த உத்தரவைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். அமைச்சருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்தப் புகார் மற்றும் நீதிமன்றத்தின் தலையீடு, ஆளுங்கட்சியான திமுகவுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.