தற்போதைய நிலவரப்படி யார் களத்தில் முந்துகிறார்கள் என்பதைப்பற்றி விவரிக்கும் பக்கம்தான் ‘முந்துவது யார்?’
மாவட்ட கள நிலவரம்தூத்துக்குடி 1. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி:முன்னொரு காலத்தில் முத்துக்குளிக்கும் தொழில் நடந்து வந்ததால் தூத்துக்குடிக்கு ’முத்துநகர்’ என்ற பெயரும் உண்டு. மாநகரட்சி பகுதியையும், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், உப்பளங்கள் நிறைந்துள்ளது.
கீதாஜீவன்
சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில்நகரமாகவும் திகழ்கிறது. மீன் பிடித்தல், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவையும் பிரதானத் தொழிலாக உள்ளது. சாலை, விமானம், ரயில், கப்பல் ஆகிய நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் பெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் வெற்றி பெற்றார்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்துநாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் உள்ளனர். அவர்களுடன் முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள், வேளாளர்கள் ஆகியோரும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் கீதாஜீவனே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரபு ஆகியோரும் மோதுகின்றனர்.
த.வெ.க சார்பில் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடலாம் என்கிறார்கள்.
எளிதான அணுகுமுறை, தொகுதிக்குள் வலம் வருவது, கட்சியின் பலம், வலுவில்லாத எதிர்கட்சி ஆகியவற்றின் காரணமாக தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலைதான் தெரிகிறது.
2. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி:தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம். தீப்பெட்டி உற்பத்தி பிரதானத் தொழில். ஆரம்ப காலத்தில் கையினால் செய்யப்பட்டு வந்த தீப்பெட்டி தற்போது முழு இயந்திர மற்றும் பகுதி இயந்திர உற்பத்தி என மாற்றம் பெற்றுள்ளது. இத்துடன் மானாவாரி விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலை, பட்டாசு மற்றும் கோரைப்பாய் உற்பத்தியும் நடைபெறுகிறது.
கடம்பூர் ராஜூ
புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய்க்கு பிரசித்தி பெற்றது. முந்தைய தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக தேவர், நாயக்கர், நாடார் ஆகிய சமூக மக்கள் உள்ளனர். இவர்களுடன் பட்டியலினத்தவர்கள், செட்டியார், விஸ்வகர்மா, இஸ்லாமியர்களும் கலந்து வசிக்கிறார்கள்.
அ.தி.மு.க சார்பில் மீண்டும் கடம்பூர் ராஜூவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.கவைப் பொறுத்த வரையில் கழுகுமலை சுப்பிரமணியன், நகரச் செயலாளர் கருணாநிதி, மாணிக்கராஜா ஆகியோர் சீட் எதிர் பார்க்கிறார்கள்.
தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சீனிவாசனே மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு வேளை ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் விநாயகா ரமேஷ் போட்டியிட்டுவார் எனக் கூறப்படுகிறது.
கடம்பூர் ராஜூ மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்.
கோவில்பட்டி
முந்தைய தேர்தலில் டி.டி.வி.தினகரனையே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வீழ்த்தியவர். தொகுதி சார்ந்த பல கோரிக்கைகள் இவரால் முன்வைக்கப்பட்டும் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களாலும் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. மற்றபடி எம்.எல்.ஏ என்ற முறையில் இவரின் செயல்பாடுகள், மக்களிடம் எளிய அணுகுமுறையில் குறைபாடில்லை. தற்போதைய நிலவரப்படி மீண்டும் இலை துளிர்க்கும் எனத் தெரிகிறது.
3. ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதி. பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதி மற்றும் முழுக்க முழுக்க ஊராட்சிகளையே உள்ளடக்கியுள்ளது. மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. முந்தைய தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்.சி.சண்முகையா.
சண்முகையா
வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக பட்டயலினத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தேவர், நாடார், பிள்ளைமார் ஆகிய சமூக மக்களும் கலந்து வசிக்கின்றனர். சிட்டிங் எம்.எம்.ஏ சண்முகையா மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அவரோடு, தி.மு.க பிரமுகர்களான காசிவிஸ்வநாதன், ராமஜெயம், இளையராஜா ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகையாவின் உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசனின் அட்ராசிட்டியால் தொகுதிக்குள் சண்முகையா மீது அதிருப்தி நிலவுகிறது.
ஓட்டப்பிடாரம்
ஆனால், தி.மு.க பலமாக இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் சுந்தர்ராஜூம் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார். தற்போதைய சூழலில் தி.மு.கவோ அ.ம.முகவோ வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
4. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் வெகு விமரிசையாக தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது.
நெல், வாழை, முருங்கை, வெற்றிலை விவசாயம், உப்பு உற்பத்தி, கருப்பட்டி உற்பத்தி என பன்முகத்தன்மை கொண்ட தொழில்கள் நடக்கிறது. இந்தியாவில், ஆந்திரா மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அடுத்தபடியாக, சிறிய ரக விண்கலங்களை விண்ணில் ஏவும் வகையில் அமைக்கப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இத்தொகுதிக்குள் அடங்குகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன்
கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், திருச்செந்தூரை ஒட்டியுள்ள சில பகுதிகள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டன. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 4 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என 5 தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார், பட்டியலித்தினர், பரதர்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் களமிறங்குவார் என்கிறார்கள்.
கே.ஆர்.எம்.ராதா கிருஷ்ணன்
பெண்கள், இளைஞர்களைக் கவரும் வகையில், கடந்த 3 மாதங்களாகவே குபேரபூஜை, குலுக்கல் பரிசு, மின்னொளி கபாடிப் போட்டி, கோலப்போட்டி என தொகுதிக்குள் பல வித போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். வலுவில்லாத எதிரணி, சிறுபான்மையினரின் பலமான வாக்கு வங்கி ஆகியவற்றால் தற்போதைய கள நிலவரப்படி மீண்டும் உதய சூரியன் உதிக்கவே வாய்ப்புள்ளது.
5. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி:தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள நீர் செழிப்பான தொகுதி ஸ்ரீவைகுண்டம். நெல், வாழை விவசாயமே முக்கியத் தொழில். நவதிருப்பதி, நவ கைலாயங்கள், தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகியவை அமைந்துள்ளது.
முந்தைய தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இங்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர், தவிர தேவர், பிள்ளைமார், பட்டியலினத்தவர் சம பலத்தில் உள்ளனர்.
ஊர்வசி அமிர்தராஜ்
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், சிட்டிங் எம்.எல்.ஏவான ஊர்வசி அமிர்தராஜே போட்டியிடுவார் என்கிறார்கள். ஒருவேளை தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டால் காவல்காடு சொர்ணகுமார் போட்டியிடலாம்.
அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனே மீண்டும் களமிறங்குவார் எனப் பேசப்படுகிறது. இத்தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 126 பேர் ஊர்வசி அமிர்தராஜ் நடத்தி வரும் சென்னை, கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் இலவசமாக பொறியியல் கல்வி பயின்றுள்ளனர்.
தொகுதிக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம், சாத்தன்குளம், ஏரல் பேரூராட்சிகளில் இவர் நடத்தி வரும் “ஊர்வசி இலவச ஐ.ஏ.எஸ் அகாடமி”யில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என 615 பேருக்கு மாதந்தோறும் ரூ,500 உதவித்தொகை எனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வருகிறார்.
சண்முகநாதன்
தொகுதி மேம்பாட்டு நிதியைத் தாண்டி தன் சொந்த நிதியில் பல உதவிகளைச் செய்து வருவது இவருக்கு ப்ளஸ். அதே நேரத்தில் தொகுதிக்குள் தலைகாட்டுவதில்லை. கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என இவர் மீது அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தி அலையை வைத்து வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என நினைக்கிறார் சண்முகநாதன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொகுதிக்குள் தேர்தல் வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இருப்பினும் வெற்றிக்காக காங்கிரஸ், அ.தி.மு.க இரு கட்சிகளுமே உழைக்க வேண்டும். போட்டி கடுமையாகவே உள்ளது,
6.விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி:தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள தொகுதி விளாத்திகுளம். முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தையும் கால்நாடை வளர்ப்பையும் கொண்டது. இங்கு விளையும் குண்டுமிளகாய் சிறப்பு பெற்றது. கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி போன்றவையும் பயிரிடப்படுகிறது. வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கி.மீ. தொலைவுக்கு கடற்கரை, மீன்பிடித்தொழில், உப்பள தொழில், கரிமூட்டம் தொழில் என பன்முகத் தொழில்கள் இங்கு உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் சொல்லிக் கொள்ளும் படியாக பெரிய தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லை.
மார்க்கண்டேயன்
விளாத்திகுளம், எட்டயபுரம் என 2 தாலுகாக்கள், ஓட்டப்பிடாரம் தாலுகாவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய யூனியன்களில் சில பகுதிகளும் அடங்கி உள்ளன. மேலும் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய பேரூராட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும் ஊராட்சிகளே.
மகாகவி பாரதியார், சீறாப் புராணம் இயற்றிய உமறுப் புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர், இசை மேதை நல்லப்பசாமி போன்றவர்கள் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி.
முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். ரெட்டியார், நாயக்கர், தேவர், நாடார், வாதியார் ஆகிய சமூக மக்கள் இருந்தாலும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ரெட்டியார் சமூக மக்களே உள்ளனர். தி.மு.க சார்பில் மீண்டும் மார்க்கண்டேயனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.
அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி சத்யா, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், காந்தி காமாட்சி ஆகியோர் காய் நகர்த்தி வருகின்றனர்.
விளாத்திகுளம்
வறண்ட பூமியான விளாத்திகுளம் தொகுதியை பசுமையாக்கிட ”வனத்திற்குள் விளாத்திகுளம்” என்ற நோக்கில், இவர் தலைமையேற்று நடத்தி வரும் "மரங்கள் மக்கள் இயக்கம்" மூலம் தொகுதி முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் இலக்கில் இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக அணுகுதல், உதவி செய்யும் பாங்கு ஆகியவை சிட்டிங் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ப்ளஸ். தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலையே தெரிகிறது.