ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள மினாப் நகரில் ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 165க்கும் மேற்பட்ட சிறுமிகளும் ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் நடைபெற்றது. ஈரான் உச்சத் தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதே நாளில் இந்த சம்பவம் நடந்தது.
ஈரான் அதிகாரிகள் இந்தக் கொடூரத்துக்கு பொறுப்பான இரு அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் லெய் ஆர். டேட் மற்றும் ஜெப்ரி இ. யார்க் ஆவர்.
இவர்கள் USS ஸ்ப்ருவான்ஸ் என்ற கப்பலில் இருந்து மூன்று முறை ஏவுகணைகளை ஏவ உத்தரவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. “இந்த இரு பேரையும் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறி அந்தப் புகைப்படங்களை ஈரானிய தூதரகங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளன.
அமெரிக்கா முதலில் தாக்குதலை மறுத்தது. பின்னர் தவறான வரைபடத் தகவல் காரணமாக ராணுவத் தளத்துக்குப் பதிலாகப் பள்ளியைத் தவறுதலாகத் தாக்கியதாக ஒப்புக்கொண்டது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.