ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள ‘நியோட் ஹோவாவ்’ என்ற முக்கிய இரசாயனத் தொழில்துறை மையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் அந்த பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, வானத்தை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
இது இஸ்ரேலின் மிக முக்கியமான இரசாயன உற்பத்தி மையம் என்பதால், அங்கிருந்து நச்சு வாயுக்கள் கசியக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், அங்குள்ள ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் தீயணைப்புத் துறையும் அப்பகுதியைச் சுற்றி வளைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடி வருகின்றனர். இரசாயனக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ஜன்னல்களைப் பாதுகாப்பாக மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மிக முக்கியமான இந்தத் தொழில்துறை மையம் தாக்கப்பட்டிருப்பது இஸ்ரேலுக்குப் பெரும் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.