அமெரிக்காவை அதிர வைத்த வடகொரியா.. ஏவுகணை என்ஜின் சோதனை வெற்றி - கிம் ஜாங் உன் பெருமிதம்!
Dinamaalai March 30, 2026 10:48 AM

வடகொரியா தனது ஐந்தாண்டு கால ராணுவ நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிக சக்தி வாய்ந்த 'திட-எரிபொருள்' ஏவுகணை என்ஜினைச் சோதித்துப் பார்த்துள்ளது.

கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதிய என்ஜின், 2,500 கிலோ நியூட்டன் (kN) உந்துவிசையை  வெளிப்படுத்தியுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சோதனையை விட சுமார் 26% அதிக வலிமை கொண்டது. இந்த என்ஜின் அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் சென்றடையும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

திரவ எரிபொருளை விடத் திட-எரிபொருள் ஏவுகணைகளை மிக விரைவாக ஏவ முடியும் என்பதோடு, எதிரி நாடுகளின் ரேடார்களில் இருந்து மறைத்து வைப்பதும் எளிது. இந்தச் சோதனையை நேரில் பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன், "இந்த வெற்றி நாட்டின் வியூக ராணுவ வலிமையை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. நவீன போர் முறைகளுக்கு ஏற்ப நமது ஆயுதங்களை மாற்றியமைப்பது தேசிய பாதுகாப்புத் தேவையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணை மற்றும் என்ஜின் சோதனைகள் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக, ஒரே ஏவுகணையில் பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வலிமையை வடகொரியா இதன் மூலம் பெற முயற்சிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.