கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியத் துறைமுக நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ஹார்முஸ்கான் மாகாணத்தில் உள்ள பந்தர் கமீர் என்ற துறைமுக நகரின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். ஈரானின் அரசுச் செய்தி நிறுவனமான IRNA இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள நிலையில், இந்தப் பகுதியில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் அரசு தீவிரமான மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது.
பாகிஸ்தான் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் அழைப்பின் பேரில், சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேற்று இஸ்லாமாபாத் வந்தடைந்தனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், போரை நிறுத்தவும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இன்று மார்ச் 30ம் தேதி நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அடுத்த வாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தில் நேரடியாகச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது கடும் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தைப் பிரயோகித்து வரும் வேளையில், பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சீனா ஆதரவு தெரிவித்துள்ளன. இருப்பினும், ஈரான் தனது நாட்டின் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்து வருகிறது.