பிரிட்டனின் புகழ்பெற்ற 'குவாக்கரெலி சைமன்ட்ஸ்' நிறுவனம், 2026ம் ஆண்டிற்கான உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியக் கல்வி நிறுவனங்கள் தங்களது சர்வதேசத் தரத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன.
இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவின் 5 முக்கியக் கல்வி நிறுவனங்கள் உலகின் தலைசிறந்த 50 இடங்களுக்குள் இடம்பிடித்துப் பெருமை சேர்த்துள்ளன.
ஐ.ஐ.டி மெட்ராஸ் (IIT Madras) பெட்ரோலியப் பொறியியல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறைகளில் உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஐ.ஐ.டி பாம்பே (IIT Bombay): பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ஐ.ஐ.டி டெல்லி (IIT Delhi): தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
ஐ.ஐ.டி கரக்பூர் (IIT Kharagpur): பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளில் டாப் 50 இடங்களுக்குள் வந்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU): கலை மற்றும் மானுடவியல்பாடப்பிரிவில் இந்தியாவின் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.
நிர்வாகத் துறையில் ஐ.ஐ.எம் ஆமதாபாத் சாதனை படைத்துள்ளது. மேலாண்மைத் துறையைப் பொறுத்தவரை, ஐ.ஐ.எம் ஆமதாபாத் உலக அளவில் 21-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. வணிகம் மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.

இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மொத்தம் 27 வெவ்வேறு பாடப்பிரிவுகள் உலக அளவில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. பொறியியல், மருத்துவம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் இந்திய நிறுவனங்களின் தரம் சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது.
இந்தியக் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரம் மற்றும் அவை உலகளாவிய மேற்கோள்களில் பயன்படுத்தப்படும் விகிதம் அதிகரித்திருப்பதே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என QS நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் 'உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை' மற்றும் 'திறன்மிகு கல்வி நிறுவனங்கள்' போன்ற திட்டங்கள், இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க உதவியுள்ளன. இந்த அங்கீகாரம் சர்வதேச மாணவர்களை இந்தியாவை நோக்கிக் கவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.