#BIG NEWS : குவைத் மீது ஈரான் தாக்குதல்: இந்தியத் தொழிலாளி பலி..!!
Top Tamil News March 30, 2026 01:48 PM

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா நாடுகளில் உள்ள அந்நாட்டின் ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதுமட்டுமில்லாமல், அந்தந்த நாடுகளை அச்சுறுத்தும் விதமாக, எண்ணெய் கிணறுகள், எரிசக்தி நிலையங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று மாலை குவைத்தில் உள்ள மின்நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குவைத் மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜவஹர் ஹயாத் கூறுகையில், 'மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சேவை கட்டடம் தாக்கப்பட்டது. இதில் ஒரு இந்தியத் தொழிலாளி உயிரிழந்தார். அந்தக் கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது,' என்றார்.

ஈரான் தாக்குதல் குறித்து குவைத் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை; கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் குவைத் மீது மொத்தம் 307 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 616 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 டிரோன்கள் கண்டறியப்பட்டு இடைமறித்து அழிக்கப்பட்டன.

குவைத் ஆயுதப்படை தளத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 வீரர்கள் காயமடைந்தனர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.