சமயபுரம் கோயில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் பலி - கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகளிலேயே விபத்து
Vikatan March 30, 2026 03:48 PM

சக்தி தலங்களில் முதன்மையானதும், அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தற்போது பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது.

இந்தப் பூச்சொரிதல் விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அதன்படி, சமயபுரம் வந்து தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக வருகை தந்த பக்தர்கள் கோயில் சன்னதி வீதி மண்டபத்தில் படுத்து உறங்கினர். இதேபோல், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நதியா (32) மற்றும் அவரது உறவினர்கள் படுத்து உறங்கியுள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் பக்தர்கள் மீதும் மண்டப சீலிங் மேற்கூரை காங்கிரீட் சுவர் பெயர்ந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே நதியா உயிரிழந்தார். உடனடியாக, அருகில் இருந்த மற்ற பக்தர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் காவல் நிலைய போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதோடு, பேரிகார்டுகளை கொண்டு சன்னதி வீதியை முற்றிலும் அடைத்தனர். அம்மனை சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும், அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.