ஈரானில் ராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படைகளை ஒருங்கிணைக்கும் மத்திய கதம் அல் அன்பியா தலைமையகம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் பாரசீக வளைகுடா உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்போம் என்றும் தரைவழித் தாக்குதலில் ஈடுபடுவோம் என்றும் அமெரிக்க அதிபர் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மோதல் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் முக்கியத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என்று அந்தத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதுடன் இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடர் போரினால் உலக அளவில் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரானின் புதிய எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.