மக்கள் பணத்தை குடும்பத்துடன் கொள்ளை அடிக்கும் ஸ்டாலின் சார்… பெரம்பூரில் விஜய் காரசார பிரசாரம்
TV9 Tamil News March 30, 2026 06:48 PM

சென்னை மாவட்டம், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்பரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ள தமிழகத்தை நாம் காப்பாற்றி ஆக வேண்டும். தமிழகத்தை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்ததற்கு தீய சக்தி திமுக தான் காரணம். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சி நடந்ததா வேறு எதுவும் நடந்ததா என தெரியவில்லை. தமிழகத்தில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. காவல்துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் சார் மக்களை காக்கவில்லை என்றால் எதுக்கு இந்த ஆட்சி. தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் சாருக்கு தமிழக மக்கள் பாதுகாப்பு குறித்து அக்கறையில்லை.

மக்கள் பணத்தை குடும்பத்துடன் கொள்ளையடிக்கும் ஸ்டாலின் சார்

திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். மக்களிடமிருந்து திமுக அரசு கொள்ளை அடித்தது போல, அவர்களது ஆட்சிக்கு வேட்டு வைக்க வேண்டும். ஏப்ரல் 23- ஆம் தேதி வாக்குப்பதிவு நாளில் விசிலுக்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். வெளியூர்களில் இருந்தாலும் சொந்த ஊருக்கு சென்று தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும். எனக்கான எல்லா வலிகளையும் தாங்கி கொண்டு உங்களுக்காக அரசியலுக்காக வந்துள்ளேன். ஒரு நாளும் உங்களை ஏமாற்ற மாட்டேன்.

மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை

இங்கு எத்தனை முனை போட்டி நடைபெற்றாலும் திமுக மற்றும் தவெகவுக்கு மட்டுமே போட்டி ஆகும். இது ஒரு தலைமுறைக்கான தேர்தலாகும். தயவு செய்து விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இது ஒரு விசில் புரட்சி தேர்தல் ஆகும். ஸ்டாலின் சார் தனது குடும்பத்துடன் சேர்ந்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்து வருகிறார் என்று தெரிவித்தார். இப்படி ஒண்ணுத்துக்கும் உதவாத திமுக ஆட்சியை விரட்டிவிட்டு, விடை பெற போகும் ஸ்டாலின் சார் தான் காரணம். பெண்கள் இரவு நேரத்தில் வெளியே சென்று வர முடியவில்லை. டீக்கடையில் டீ அருந்த முடியவில்லை.

திமுக ஆட்சியில் ரூ2000 கோடிக்கு மேல் ஊழல்

போதை கும்பல் அறிவாளால் வெட்டி விட்டு சென்று விடுகிறது. இது நாடா அல்லது காடா. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. நகராட்சி துறையில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. வண்டி வண்டியாக கொள்ளையடித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மக்களுக்கு அளித்து வெற்றி பெறலாம் என்று ஸ்டாலின் சார் திட்டமிட்டுள்ளார். எனவே, அந்த பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு அவர்களது காதில் விசிலை ஊதி அனுப்புங்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.