T Rajendar: உயிருள்ளவரை உஷா பட பாடல்கள் காப்புரிமை மீறல்...சென்னை உயர்நீதிமன்றத்தில் டி ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி வழக்குப்பதிவு
ராகேஷ் தாரா March 30, 2026 07:14 PM

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் டி ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாயிண்ட் சிவில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். டி.ஆர் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்தின் பாடல்களை அனுமதியின்றி பல்வேறு டிஜிட்டல் தளங்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி இந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர். 

1983 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் உயிருள்ளவரை உஷா. டி.ஆர் இப்படத்திற்கு கதை , திரைக்கதை வசனம் , இயக்கி நடித்ததுடன்  பாடல்களை எழுதி இசையமைக்கவும் செய்தார். டி.ஆருக்கு சொந்தமான தஞ்சை சினி ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்தது. தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த இப்படம்  தெலுங்கில் டப் செய்யப்பட்டதுடன்  கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற ' வைகைக்கரை காற்றே நில்லு' , ' இந்திரலோகத்து சுந்தரி' , 'உன்னைத்தானே அழைதேன்' ஆகிய பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆகின. அண்மையில் இப்படம் 43 ஆண்டுகள் கழித்து திரையரங்கில் ரீரிலீஸ் ஆனது. சிம்பு சினி ஆர்ட்ஸ் இப்படத்தை வெளியிட்டது. 

கைமாறிய பாடல்களின் காப்புரிமை 

உயிருள்ள வரை உஷா படத்தின் ரீரிலீஸ் செய்தபோதுதான் இப்படத்தின் பாடல்களின் காப்புரிமை கடந்த 43 ஆண்டுகளில் பல்வேறு தரப்பினருக்கு கைமாறியுள்ளதாகவும் அனுமதியின்றி இப்படத்தின் பாடல்களை பல்வேறு டிஜிட்டல் தளங்கள் பயன்படுத்தியுள்ளதும் டி ராஜேந்தருக்கு தெரியவந்துள்ளது. இதனால் உயிருள்ளவரை உஷா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் என்கிற அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர் மற்றும் அவரது மனைவி உஷா வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களின் காப்புரிமை ஏ.வி.எம் ஸ்டுடியோஸ் மற்றும் WL எபிக் மீடியா பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடம் உள்ளது. இப்படத்தின் பாடல்களிடம் இருந்து எந்த விதமான காப்புரிமை தொகையும் தங்களுக்கு வந்து சேரவில்லை என டி ஆர் தரப்பு வழக்கறிஞர் கே தியாகராஜன் தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் WL எபிக் மீடியா பிரைவேட் லிமிடட் நிறுவனத்திற்கு பதிலளிக்க ஏப்ரம் 20 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளார். உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களை ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் மற்ற எந்த நிறுவனமும் முறைகேடாக பயன்படுத்தாமல் இருக்கும் விதமாக நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் பாடல்களை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் மூலம் பிரதிவாதிகள் பெற்ற இலாபங்களையும் ஆதாயங்களையும் வெளியிடவும், வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பட்ட செலவுகளைச் செலுத்தவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.