ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை! டி.என்.ஏ சோதனையில் வெளிவந்த உண்மை..
Webdunia Tamil March 30, 2026 07:48 PM

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடுத்த வழக்கில், அவரது குழந்தைக்கு பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல சமையல் கலைஞராகவும், நடிகராகவும் வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் உள்ள நிலையில், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக்கிவிட்டு நடுத்தெருவில் கைவிட்டுவிட்டதாகவும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் மாநில மகளிர் ஆணையம் மற்றும் நீதிமன்றத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை என்னுடையது அல்ல; என்னை மிரட்டி திருமணம் செய்து பணம் பறிக்கப் பார்க்கிறார். ஒருவேளை டி.என்.ஏ பரிசோதனையில் அது எனது குழந்தை என நிரூபிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தையை நானே பராமரிப்பேன் என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம், உண்மைத்தன்மையைக் கண்டறிய இருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

தற்போது, அந்த டி.என்.ஏ பரிசோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செந்தில்குமார், டி.என்.ஏ அறிக்கையின்படி ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பதை உறுதி செய்துள்ளார்.

குழந்தை தன்னுடையது என நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்றுக்கொள்வேன் என ரங்கராஜ் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அவரது அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.