சுகுமாரால் அதகளப்படும் அதிமுக கூட்டணி; ஹாட்ரிக் வெற்றிபெறுவாரா ஈஸ்வரப்பன்? - பரபரக்கும் ஆற்காடு களம்
Vikatan March 30, 2026 07:48 PM

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன். இந்த முறையும், தி.மு.க வேட்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பனே களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2006 - 2011 காலக்கட்டத்தில், ஆற்காடு நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கும் ஈஸ்வரப்பன், தொகுதிக்குள் கணிசமாக வாழும் அகமுடைய முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், அந்தச் சமூக வாக்குகள் தனக்குக் கைகொடுக்கும் என நம்புகிறார்.

அதே சமயம், உடன்பிறப்புகளிடம் உற்சாக மனநிலை இல்லாதது ஈஸ்வரப்பனை சோர்வடையச் செய்திருக்கிறது. பொருளாதார பின்னணியும் பலவீனமாக இருப்பதால் ஈஸ்வரப்பன் தடுமாற்றத்தில் இருக்கிறார். சொல்லப் போனால், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளாமலும் இருந்திருக்கிறார். தி.மு.க மாவட்டச் செயலாளரும் சிட்டிங் அமைச்சருமான ஆர்.காந்தியின் உள்ளடி வேலைகளால் ஈஸ்வரப்பன் அமைதி காத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டு, அவரின் மகனுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தனக்கு எந்தவிதமான நெருக்கடியும் இனி வராது என்ற நம்பிக்கையில் ஆற்காடு தொகுதியில் தன்னுடைய ஹாட்ரிக் வெற்றிக்கான பணிகளிலும் விறுவிறுப்பாக இறங்கிவிட்டார் ஈஸ்வரப்பன்.

மறுபுறம், அ.தி.மு.க கூட்டணியில் கூச்சல், குழப்பம் ஓய்ந்தபாடில்லை. கடந்த முறை ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார், `இந்த முறை ஆற்காடு தொகுதிக்கு ஏன் வந்தார்? பா.ம.க-வுக்குச் செல்ல வேண்டிய தொகுதியை எப்படிக் கைப்பற்றினார்? இதற்காக என்னவெல்லாம் டீல் நடந்தது ?’ போன்ற கேள்விகளை பாட்டாளிகள் அடுக்கடுக்காக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.எம்.சுகுமார்

அதற்கெல்லாம் பதிலளிக்காமல் பம்மிக்கொண்டிருக்கிறார் சுகுமார். எல்லாவற்றையும்விட `இப்போதே நான் ஜெயிச்சுட்டேன்’ என்ற மிதப்பிலும் சுகுமாரின் செயல்பாடுகள் இருப்பதால், அ.தி.மு.க கூட்டணி அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படி அ.தி.மு.க கூட்டணியில் பிரச்னைகளும், விமர்சனங்களும் பரபரத்தாலும், தொகுதி மக்களிடம் மாற்றத்துக்கான மனநிலை உருவாக்கியிருப்பதால் தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி அ.தி.மு.க வெற்றியை நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.