விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!.. காவல்துறையினர் அதிரடி!...
Webdunia Tamil March 31, 2026 12:48 PM


தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. சமீபத்தில்தான் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.

அதேநேரம் விஜய் எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு அவரின் தவெக தொண்டர்களுக்கும் ரசிகர்களும் இருந்தது. ஆனால் அவர் எல்லா தொகுதிகளுக்கும் செல்ல மாட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது.. தமிழகத்தில் சில தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்வதாக விஜய் முடிவெடுத்திருக்கிறார்..

அந்த வகையில் நேற்று காலை பெரம்பூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. வழக்கம் போல் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அதன்பின் திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதிக்கு சென்றார். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் இரண்டு நிமிடத்தில் முடித்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினர்.. அதோடு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மைக்கும் வேலை செய்யவில்லை.. எனவே இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு விஜய் அங்கிருந்து சென்று விட்டார்..

மேலும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் செய்யவிருந்த பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார். இந்நிலையில்தான், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விஜய் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.. பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் பாதையை மறைத்ததாகவும் தேர்தல் நடத்தை விதி மீறல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சென்னை பெரவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்..

5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை திரட்டியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 5 ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரியிடம் அளித்த உறுதி மொழியை மீறி 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் அதிகாரி புகார் அளித்திருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.