அசாம் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 'பொது சிவில் சட்டம்' அமல்படுத்தப்படும் மற்றும் 'லவ் ஜிஹாத்'துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிரடி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆறாவது அட்டவணையின் கீழ் வரும் பழங்குடியின பகுதிகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
பெண்களை கவரும் வகையில் 'அருணோடோய்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை 1,250 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், 40 லட்சம் பெண்களை 'லட்சாதிபதி திதி'களாக மாற்ற 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைப்பதே பாஜகவின் இலக்காகும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் அசாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 மடங்கு அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
Edited by Siva