மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 வரையிலான காலக்கட்டத்தில் அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால், மாத இறுதியில் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடையே ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி, நிதியாண்டு முடிவு (Bank Closing), பெரிய வியாழன் மற்றும் புனித வெள்ளி என வரிசையாக விடுமுறைகள் அணிவகுப்பதால், 'சம்பளம் சரியான நேரத்திற்கு வருமா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், எதார்த்த நிலை என்ன? பெரும்பாலான சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, இந்த விடுமுறைகளால் பெரிய பாதிப்பு இருக்காது என்பதுதான் உண்மை.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் NEFT, RTGS மற்றும் IMPS போன்ற டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகளையே சம்பளம் வழங்க பயன்படுத்துகின்றன. இந்த அமைப்புகள் செயல்படுவதற்கு வங்கி கிளைகள் திறந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், அதன் பின்னணி தொழில்நுட்பக் கட்டமைப்பு (Backend Infrastructure) தடையின்றி இயங்கும்.
எனவே, உங்கள் நிறுவனம் ஏற்கனவே 'பேரோல்' (Payroll) பணிகளை முடித்திருந்தால், திட்டமிட்டபடி உங்கள் கணக்கிற்கு பணம் வந்துவிடும். பல நேரங்களில் வங்கிகள் விடுமுறை என்பதே உங்களுக்குத் தெரியாத அளவிற்குப் பரிமாற்றங்கள் சுமூகமாக நடக்கும்.
இதில் கவனிப்பட வேண்டிய ஒரு சிறிய விஷயம் இருக்கிறது. உங்கள் நிறுவனம் கடைசி நேரத்தில் சம்பளப் பட்டியலைச் சமர்ப்பிக்கும் வழக்கம் கொண்டதாக இருந்தால், சிறு தாமதங்கள் ஏற்படலாம்.
குறிப்பாக ஏப்ரல் 1 மிக முக்கியமானது. அன்று வங்கிகள் தங்கள் ஆண்டு கணக்குகளை முடிக்கும் (Financial Year Closing) நாள் என்பதால், வாடிக்கையாளர் சார்ந்த பரிவர்த்தனைகள் சற்று பின்தங்கக்கூடும். ஏப்ரல் 1-ம் தேதியன்றே உங்கள் நிறுவனம் சம்பளப் பணிகளைத் தொடங்கினால், அது உங்கள் கணக்கில் வந்து சேரச் சற்று கூடுதல் நேரமெடுக்கலாம்.
உங்கள் சம்பளத் தேதி இந்த விடுமுறை நாட்களுக்குள் வருகிறதென்றால், பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சம்பளம் எப்போது அனுப்பப்படும் என்பதை முன்கூட்டியே கேட்டுத் தெரிந்துகொள்வது பதற்றத்தைக் குறைக்கும். உங்கள் வங்கியின் SMS அல்லது மொபைல் ஆப் நோட்டிபிகேஷன்களைக் கவனியுங்கள். வங்கி விடுமுறைகள் கிளை செயல்பாடுகளை மட்டுமே நிறுத்தும், டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை அல்ல. ஒருவேளை தாமதம் ஏற்பட்டால், அது தொழில்நுட்ப நடைமுறை சார்ந்ததே தவிர, வேறு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.