தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 80களில் தமிழ் சினிமாவை கிராமப்புற வாழ்க்கைக்கு கொண்டு சென்ற முன்னோடி இயக்குநராக விளங்கிய அவர், தற்போது உடல்நலக் குறைவால் சிகிச்சையில் உள்ளார்.
‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு பல வெற்றிப்படங்களை வழங்கி தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை உருவாக்கினார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்கு சீமையிலே’ உள்ளிட்ட படங்கள் அவரது திறமையை உறுதி செய்தவை. மேலும் ராதிகா, ரேவதி, கார்த்திக், நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநராக பிஸியாக இருந்த காலத்திற்குப் பிறகு, நடிகராகவும் பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் பாரதிராஜாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் புகைப்படங்களில், முன்பு திடகாத்திரமாக இருந்த பாரதிராஜா மிகவும் சோர்வாக காணப்படுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “இவர் நம்ம பாரதிராஜாவா?” என்ற கேள்வியுடன் பலரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
வதந்திகளை குடும்பத்தினர் மறுத்துள்ள நிலையில், பாரதிராஜா விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய உற்சாகத்துடன் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.