மத்திய அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே, “தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைத்து என்.டி.ஏ. ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு வரும் ஏப்ரல் 09-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் கேரளாவிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், யூனியன் பிரதேசத்தில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அரசியல் கட்சிகளின் தேசியத் தலைவர்கள், கூட்டணி கட்சியின் தலைவர்கள் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியை ஆதரித்து அந்தக் கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெற்றிருக்கும் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே யூனியன் பிரதேசத்திற்கு வருகைத் தந்தார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது; ஐந்து மாநிலத் தேர்தலில், புதுச்சேரி மற்றும் அசாமில் என்.டி.ஏ. ஆட்சி இருந்து வருகிறது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றி பாஜகவின் ஆட்சி மலரப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.அதேப்போன்று கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அங்கு பாஜக வெல்லும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்காது.விஜய்யும் களத்தில் இருக்கிறார். தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மை கிடைக்காமல் போனால், தவெக தலைவர் விஜய்யுடன் பேசி என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.