ரகசியமாக அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த சீனா, ரஷ்யா; பகிரங்கமாக போட்டு உடைத்த பீட் ஹெக்செத்
ஸ்ரீராம் ஆராவமுதன் April 01, 2026 12:14 PM

ஈரானில் நடைபெற்று வரும் போரில், வரும் நாட்கள் தீர்க்கமானவையாக இருக்கும் என்று அமெரிக்க போர்த்துறைச் செயலர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். மேலும், ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறினால், அமெரிக்கா போரை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதோடு, ஈரானுக்கு சீனாவும், ரஷ்யாவும் உதவி வருவது தங்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்த பீட் ஹெக்செத்

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு உதவும் அண்டை நாடுகளான அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த போரில், ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள படைத்தளங்களில் இருந்து அமெரிக்க வீரர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தீவிரமடைந்துவரும் இந்த போர் தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்ற பெயரில் அமெரிக்கா இந்த தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்க ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் நேரில் பார்வையிட்டுள்ளார். அது குறித்த தகவலையும், புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று பகிர்ந்துள்ளா.

“வரும் நாட்கள் மிகவும் முக்கியமானவை“

பின்னர், அமெரிக்க கூட்டுப் படைத் தளபதிகள் குழுவின் தலைவரான ஜெனரல் டான் கெய்னுடன் இணைந்து பீட் ஹெக்செத் பேசினார். அப்போது, "எங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன, அவர்களுக்கோ குறைவாகவே உள்ளன. ஒரே மாதத்தில் நாங்கள் நிபந்தனைகளை நிர்ணயித்துவிட்டோம், வரவிருக்கும் நாட்கள் மிகவும் தீர்க்கமானவையாக இருக்கும். ஈரானுக்கு அது தெரியும். மேலும், ராணுவ ரீதியாக அவர்களால் கிட்டத்தட்ட எதுவும் செய்ய முடியாது," என்று அவர் கூறினார்.

மேரும், விவேகமாக நடந்துகொண்டால், ஈரான் ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளும், அப்படி ஈரான் உடன்பாட்டை எட்டவில்லை என்றால், போர் மேலும் தீவிரத்துடன் தொடரும் என்றும் ஹெக்செத் எச்சரித்துள்ளார்.

“சீனாவும், ரஷ்யாவும் என்ன செய்கின்றன என்பது எங்களுக்கு தெரியும்“

அதோடு முக்கியமாக, ஈரானுக்கு உதவுவதற்காக சீனாவும், ரஷ்யாவும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும் என்று ஹெக்செத் அதிரடியாக தெரிவித்தார். "ரஷ்யாவையும் சீனாவையும் பொறுத்தவரை, அவர்கள் என்ன செய்கிறார்கள், எதைச் செய்கிறார்கள், எதைச் செய்யவில்லை என்பது எங்களுக்கு துல்லியமாகத் தெரியும். அது என்ன என்பதை நாங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஆனால், தேவைப்படும் இடங்களில், நாங்கள் அதை கையாளுகிறோம், தணிக்கிறோம் அல்லது நேரடியாக எதிர்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.

மேலும், வான்வழித் தாக்குதல்களின் விளைவாக ஈரானிய ராணுவத்தில் பரவலான விலகல்களும், மூத்த தலைவர்களிடையே விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்நாட்டு ராணுவத்தின் மன உறுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஹெக்செத், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானால் ஏவப்பட்ட  ஏவுகணைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

சீனா, ரஷ்யா தொடர்பான பீட் ஹெக்செத்தின் இந்த கருத்து, ஏற்கனவே உலாவரும் கருத்துக்களை ஊர்ஜிதப்படுததியுள்ளது. அதாவது, ஈரான் இந்த அளவிற்கு துல்லியமாக எதிரி இடங்களை கண்டுபிடித்து தாக்குவதற்கான உளவு மற்றும் தரவுகளை சீனாவோ, ரஷ்யாவோ வழங்கக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. அந்த தகவலைத் தான் தற்போது ஹெக்செத் உறுதி செய்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.