மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து அண்மையில் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தவெக ஆதரவு பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக பொன்ராஜ் மீது சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது விஜய்யுடனான தனது பழைய சந்திப்பு குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
“கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் ஆலோசனைக் கேட்டார். நடிகர் தாமு என்னை அழைத்துச் சென்றார். அப்போது புஸ்ஸி ஆனந்த் தான் எங்களை அழைத்துச் சென்றார், ஆனால் அவர் யாரென்று அப்போது எனக்குத் தெரியாது. நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவரது மனைவி சங்கீதா தான் எங்களுக்கு உணவு பரிமாறினார்.
அந்தச் சந்திப்பில் விஜய்க்கு தான் வழங்கிய ஆலோசனைகள் குறித்து பொன்ராஜ் மேலும் கூறுகையில், தமிழக அரசியலில் வெல்ல வேண்டுமானால் மக்களோடும், இளைஞர்களோடும் நெருக்கமாக இருக்க வேண்டும். சினிமாப் புகழை மட்டும் நம்பி அரசியலுக்கு வர வேண்டாம். முதலில் அரசியலைக் கற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக அரசியலுக்கு வராமல், அடுத்த 10 ஆண்டுகள் மக்களுக்காக களப்பணி ஆற்றுங்கள், அதன் பிறகு அரசியலுக்கு வாருங்கள் என்று அறிவுறுத்தினேன்.
“ஐபேக் போன்ற நிறுவனங்கள் அரசியல் வியூகங்களை மட்டுமே வகுக்கும். ஆனால் நான் அப்துல் கலாமுடன் இருந்த 20 ஆண்டு கால அனுபவத்தில், நாட்டின் வளர்ச்சி குறித்த வியூகங்களை வழங்குபவன். 350 கோடி ரூபாய் கட்டணம் வாங்கியிருந்தால் எனக்கு மதிப்பு இருந்திருக்கும். நான் இலவசமாக ஆலோசனை வழங்கியதால் எனக்கு மதிப்பு இல்லை. விஜய்யின் ‘தலைவா’ படத்திற்கு முன்பே இந்தச் சந்திப்பு நடந்தது. ‘Time to Lead’ போன்ற வாசகங்கள் எல்லாம் என்னைச் சந்தித்த பிறகு தான் உருவானது,” என பொன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல் கலாம் மறைவுக்குப் பின் தனிக்கட்சி தொடங்கி, பின்னர் அதனை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைத்த பொன்ராஜ், தற்போது அக்கட்சி திமுக கூட்டணியில் உள்ளதால் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இதனிடையே, அனிதா மரணத்தின் போது விஜய் வந்த நிகழ்வில் சீமான், திருமாவளவன் ஆகியோருடன் தானும் இருந்ததாகவும், அப்போது பெரிய அளவில் கூட்டம் வரவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.