கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜீவ்காந்தியை அறிமுகப்படுத்தும் மற்றும் அக்கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தச் சூழலில் கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகுவேல் பாபுவின் கணவரும் அக்கட்சியின் கள்ளக்குறிச்சி நகரச் செயலாளருமான பாபு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பல மன உளைச்சல்கள் இருந்தாலும் கழகம் வெற்றி பெற வேண்டும் என்பதில் தமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்த அவர் தொடர்ந்து நகரச் செயலாளராகப் பணியாற்றத் தமக்கு விருப்பம் இல்லை என்று கூறி மேடையிலேயே தனது முடிவை அறிவித்தது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது பதவி விலகல் குறித்து மேடையில் பேசிய பாபு தம்மோடு இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தம்பி ராஜீவ்காந்தியை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்ட போதிலும் தேர்தல் நேரத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் திடீரெனப் பதவியைத் துறந்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
நகரச் செயலாளரின் இந்த அதிரடி முடிவிற்கான உண்மையான காரணம் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.