"விஜய் என் தம்பி.. குஷ்பூ என் பலம்!" - மதுரை தேர்தல் களத்தில் இறங்கிய சுந்தர்.சி-யின் அதிரடி பேட்டி!
Top Tamil News April 01, 2026 06:48 PM

சென்னை விமான நிலையத்தில் பாஜக கூட்டணியில் புதிய நீதி கட்சியின் சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநருமான சுந்தர்.சி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "நான் நிறைய பேட்டி தந்துள்ளேன். முற்றிலும் மாறுப்பட்ட களத்தில் இருந்து தற்போது பேட்டியளிக்கிறேன். மிகவும் சந்தோசமான விஷயம். எனக்கு வாய்ப்பளித்த புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டி.டி.வி. தினகரன், ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜான்பாண்டியன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. புதிய நீதிக் கட்சியின் தலைவர் அண்ணன் ஏ.சி.சண்முகம் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்.

அவருக்கு நல்ல செய்தியை மதுரை மத்திய தொகுதி மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மதுரை மத்திய தொகுதி மக்கள் வெற்றிக் கனியை எனக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக மாதம் 15 நாள் என்னுடைய வாழ்க்கை மதுரையில் தான் இருக்கும். அதை உறுதிபட சொல்கிறேன். திரைப்படத் துறையில் வேண்டுமென்ற அளவிற்கு பணிபுரிந்துவிட்டேன். 30 ஆண்டுகளாக நிறைய வெற்றியைக் கொடுத்துள்ளேன். தேர்தல் முடிவைப் பொறுத்தே எனது அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்.

மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்கள் அனைவரிடமும் உள்ளது. நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் இங்கேயே பேசிக் கொண்டு இருக்க முடியாது. எந்த வகையிலும் வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது தான். அருவருக்கத்தக்க விஷயம் தான். இப்படியெல்லாம் அரசியலில் இருப்பதைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.

விஜய் சார் என் மீது பெரும் அன்பும், மதிப்பும் கொண்டவர். நானும் அதே போன்று தான். விஜய்யை எனது மனைவி தம்பியாக கருதுகிறார். விஜய்யும் அக்கா என்று தான் அழைப்பார். அதனால் விஜய்யை பற்றியோ, அவரது கட்சியை பற்றியோ விமர்சிக்கத் தயாராக இல்லை.

மதுரை மத்திய தொகுதியில் நான் போட்டியிடும் சின்னமான இரட்டை இலைக்கும், திமுகவின் உதயசூரியனுக்கும் இடையே தான் போட்டி. எனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய குஷ்பூ வருவார்" எனத் தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.