ஐபிஎல் 2026 தொடரின் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி, ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை அணி வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, ஆக்ரோஷமாக விளையாடி 12.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி எங்களை முழுமையாக முறியடித்துவிட்டது. டாஸ் வென்றது அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. மைதானம் சில நாட்களாக மூடப்பட்டிருந்ததால் நிலவிய ஈரப்பதம் காரணமாக, தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்தது. இதனைச் சமாளிக்க முடியாமல் எங்கள் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் எச்சரிக்கையாக விளையாடி இருக்கலாம். ஆனால், போட்டி முடிந்த பிறகு இவ்வாறு விமர்சிப்பது எளிது. தற்போதைய கிரிக்கெட் சூழலில் வீரர்கள் இயல்பாகவே ஆக்ரோஷமாக விளையாட விரும்புகிறார்கள். எனினும், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்வது அவசியம்.
மேலும் இந்தத் தோல்வி எங்களுக்கு ஒரு நல்ல பாடம். இதிலிருந்து மீண்டு வந்து, சென்னையில் நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம். எங்கள் வீரர்கள் மீது எங்களுக்கு 100 சதவீத நம்பிக்கை உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.