திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வேட்பாளரை வரவேற்கும் விதமாக மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மேளம் வாசித்துக் கொண்டிருந்த குழுவில் இருந்த ஒருவர், உற்சாக மிகுதியில் விசிலை ஊதி சத்தம் எழுப்பிக் கொண்டே வாசித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர், மேளம் வாசித்தவரிடம் சென்று திடீரென அவரது வாயில் இருந்த விசிலை வலுக்கட்டாயமாக பிடுங்கி தூரமாக வீசியெறிந்தார்.
கூட்டத்திற்கு நடுவே அனைவர் முன்னிலையிலும் அந்த நிர்வாகி காட்டிய அதிகாரம் மற்றும் அநாகரிகமான செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கஷ்டப்பட்டு உழைக்கும் கலைஞரை இதுபோன்று பொது இடத்தில் அவமானப்படுத்தியது முறையல்ல எனப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே நிர்வாகி ஒருவர் இப்படி நடந்துகொண்டது அதிமுக வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.