"அந்த ஒருவரால்தான் அது நடக்கவில்லை" - திமுக - அதிமுக இணைய முயன்ற கதை தெரியுமா? | Vote Vibes
Vikatan April 01, 2026 11:48 PM

தமிழக அரசியலில் திமுகவும், அதிமுகவும் இரு துருவங்கள் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த இரு கட்சிகளையும் இணைக்க 1970-களின் இறுதியில் ஒரு தீவிர முயற்சி நடைபெற்றது குறித்து உங்களுக்குத் தெரியுமா?

இந்த இணைப்பின் வரலாற்று பின்னனியில் இருந்தவர், ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான பிஜு பட்நாயக்.

பிஜு பட்நாயக்கின் முயற்சி

மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி 1979-ல் கவிழ்ந்ததும், சில வார காலம் பிரதமராக நீடித்த சரண்சிங் ஆட்சியும் இந்திரா காந்தி ஆதரவை வாபஸ் பெற்றதால் கவிழ்ந்தது.

பிஜு பட்நாயக் திராவிடக் கட்சிகளின் ஆதரவு

அடுத்த பொதுத் தேர்தலுக்காக இந்தியா தயாராகிவந்த நேரம். மீண்டும் இந்திரா காங்கிரஸ் பலம்பெற்றுவிடக் கூடாது எனக் கருதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அப்போதைய மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக் அதிமுக- திமுக இணைப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

காரணம் மத்தியில் இருந்த ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் இருந்த திராவிடக் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது.

துரைமுருகன்: எம்.ஜி.ஆரின் 'செல்லப்பிள்ளை' கலைஞரை 'தலைவராக' ஏற்றுக்கொண்டது ஏன்? | Vote Vibes 06 கலைஞரின் நிபந்தனைகள்

இதனைத் தொடர்ந்து 1979-ல் தனது நண்பரான கலைஞரை நேரில் சந்தித்து பிஜு பட்நாயக் திமுக-அதிமுகவின் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்.

அந்தப் பேச்சுவார்த்தையின்போது பிஜு பட்நாயக்கிடம் கலைஞர் சில நிபந்தனைகளை முன் வைத்திருக்கிறார்.

அதாவது, "இரண்டு கட்சிகளும் இணையும் பட்சத்தில் கட்சியின் பெயர் திமுக என்றே இருக்க வேண்டும். அதிமுக கொடியில் இடம்பெற்றிருக்கக்கூடிய அண்ணாவின் படமே கட்சி கொடியில் பயன்படுத்தி கொள்ளலாம்.

பிஜு பட்நாயக் - கலைஞர் எம்.ஜி.ஆரே முதல்வராகத் தொடரலாம் - கலைஞர்

இப்போது முதல்வராக இருக்கும் எம்.ஜி.ஆரே முதல்வராகத் தொடரலாம். எங்களுக்கு எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் நாங்கள் அமைச்சர் பதவி எல்லாம் கேட்க மாட்டோம்.

எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட பொருளாதார இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

நான் கட்சியினுடைய தலைவராக இருக்க வேண்டும். மற்ற பதவிகள் குறித்து நாம் பிறகு முடிவு செய்துகொள்வோம்" என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை கலைஞர் முன் வைத்திருக்கிறார்.

கலைஞர் - எம்.ஜி.ஆர் சந்திப்பு

இந்த நிபந்தனைளைக் கேட்ட பிஜு பட்நாயக் கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் சந்திக்க வைக்க சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்.

திமுக தரப்பில் கருணாநிதியும், பேராசிரியர் க.அன்பழகனும், அதிமுக தரப்பில் எம்.ஜி.ஆர், வி.ஆர். நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் சுமார் அரை மணி நேரம் கட்சியை இணைப்பது குறித்து தனியாகப் பேசியிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் `ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் 'நான்' இல்லை; இந்திரா காந்தி' - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes தோல்வியில் முடிந்த பிஜு பட்நாயக்கின் முயற்சி

இறுதியாக அதிமுக, திமுக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை வெவ்வேறு இடங்களில் கூட்டி கட்சி இணைப்பு தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்ற முடிவை இருவரும் எடுத்திருக்கிறார்கள்.

எல்லாம் சுமுகமாக முடிந்தாலும் சந்திப்பிற்கு அடுத்த நாள் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர், திமுகவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். இணைப்பு பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. திமுக - அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற பிஜு பட்நாயக்கின் முன்னெடுப்புகள் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.

இணைப்பு குறித்து கலைஞர்

இந்த ரகசியச் சந்திப்பு நடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய தி.மு.க தலைவர் கருணாநிதி, "எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த ஒருவர்தான் இந்தத் திட்டத்தைக் கெடுத்தார். எம்.ஜி.ஆருடனான தனிப்பட்ட சந்திப்பு சுமுகமாக இருந்தது.

கலைஞர் மு.கருணாநிதி

சந்திப்புக்குப் பிறகு அவர் வேலூருக்குப் புறப்பட்டார். காரில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் தோல்வியே காணாத கலைஞர்; 1984 தேர்தலில் மட்டும் போட்டியிடாதது ஏன்? | Vote Vibes
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.