“27 தொகுதிகள் கொடுத்த அதிமுக”… ஆனாலும் பாஜகவுக்கு பெரும் தலைவலி…! அடம்பிடிக்கும் அண்ணாமலை..? பியூஸ் கோயலின் திடீர் விசிட்டுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா..?
SeithiSolai Tamil April 02, 2026 12:48 AM

அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட விரும்பும் தொகுதிகள் ஒதுக்கப்படாதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளைக் குறிவைத்து அண்ணாமலை தரப்பு தீவிரமாகப் பணியாற்றி வந்தது. அதேவேளையில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் வானதி சீனிவாசன், இந்த முறை கோவை வடக்கு தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் காய் நகர்த்தி வந்தார்.

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினார். இதில் மயிலாப்பூர் மற்றும் கோவை வடக்கு ஆகிய முக்கியத் தொகுதிகள் மட்டுமே இடம்பெற்றன. பாஜகவினர் வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதிய பல தொகுதிகள் ஒதுக்கப்படாதது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலை போட்டியிட விரும்பிய தொகுதிகள் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து பாஜக மையக்குழு கூட்டத்தை நடத்தினார். புதுச்சேரியில் இருந்த அண்ணாமலை, ஹெலிகாப்டர் மூலம் சென்னை வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்கள் அதிமுக தலைமையிடம் உரிய முறையில் பேசி சாதகமான தொகுதிகளைப் பெறவில்லை எனக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.

“கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் நாம் கூடுதல் தொகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலையின் அதிருப்தியைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம் பேசி சென்னை மற்றும் கோவையில் சில தொகுதிகளை மாற்றிக் கொள்ளலாம் என பியூஷ் கோயல் அண்ணாமலையைச் சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஏற்கனவே முடிவான தொகுதிகளை மாற்றுவதற்கு அதிமுக தரப்பு உடன்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அண்ணாமலை எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.