“திருச்சியில் நாளை விஜய் பிரச்சாரம்... பொதுமக்கள் யாரும் நேரில் வரவேண்டாம்”- என்.ஆனந்த்
Top Tamil News April 02, 2026 12:48 AM

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதை அனைவரும் அறிவீர்கள் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக என்.ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதை அனைவரும் அறிவீர்கள். இந்நிலையில், நாளை (02.04.2026, வியாழக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் பிற தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது. அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.