ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தை தணித்து, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் 35 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக லண்டனில் சர்வதேச அளவிலான தூதரக மாநாடு நடைபெறவுள்ளது.
எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த பாதையில் கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்ய பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போரில் தங்களுக்கு உதவாத நாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் இந்த தூதரக நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் பிரிட்டன் நேரடியாக பங்கேற்காததை கண்டித்த ட்ரம்ப், "உங்கள் எண்ணெயை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்" என சாடினார். இதற்கு பதிலளித்த ஸ்டார்மர், பிரிட்டனின் தேசிய நலன் சார்ந்தே முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. ஈரான் இந்த பாதையை முடக்கியுள்ளதால், உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனை சீர்செய்ய ராணுவ ரீதியிலான திட்டங்களையும் வகுக்க இந்த 35 நாடுகள் முடிவு செய்துள்ளன.
Edited by Siva