2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள சூழலில், பிரபல அரசியல் ஆய்வு நிறுவனமான ‘லோக்போல்’ (Lokpoll) வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழகத்தின் வருங்கால அரசியல் பாதையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன. இந்தக் கணிப்பின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மீண்டும் ஒருமுறை அசுர பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது உறுதியாகத் தெரிகிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்களை வாரிச் சுருட்டி இமாலய வெற்றியைப் பெறும் என லோக்போல் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் வாக்கு வங்கி 40 சதவீதமாக நிலைபெற்றுள்ளது, இது ஆளும் அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே இருக்கும் அமோக ஆதரவைக் காட்டுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கு 38 முதல் 42 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 29 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றுள்ள போதிலும், ஆளும் கட்சியின் பலமான அலைக்கு முன்னால் அவர்களால் போதிய இடங்களைக் கைப்பற்ற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்தக் கணிப்பு கூறுகிறது.
இந்தத் தேர்தலின் மிகப் பெரிய ‘அதிர்வேட்டு’ அல்லது ‘எக்ஸ்-ஃபேக்டர்’ (X-factor) ஆக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்துள்ளது. தனது முதல் தேர்தலிலேயே 23.9 சதவீத வாக்குகளை ஈர்த்து, 8 முதல் 10 தொகுதிகளை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனைப் போட்டியை உடைத்து, ஒரு வலுவான மும்முனைப் போட்டியை (Three-way contest) உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் புதிய வாக்காளர்களின் வாக்குகளைத் தவெக வெகுவாக ஈர்த்துள்ளது.
லோக்போல் கணிப்பின்படி, மண்டல வாரியாகப் பார்த்தால் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களிலும் திமுக தனது பிடியை வலுவாக்கியுள்ளது. அதே சமயம், சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் தவெக-வின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த கருது கணிப்பு குறித்து அதிமுக நிர்வாகி விமர்சனம் செய்து வெளியிட்டுள்ள செய்தியில், "திமுக ஆதரவு என்று இந்த கருத்து கணிப்பு வெளிவந்த நாள் April 1st. இன்று முட்டாள்கள் தினம் என்பதை அறிந்து இதை வெளியிட்டது திட்டமிட்டு நடந்த ஒன்று என்பதை புரிந்து கடந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.