'புதிய அதிகாரிகள் வேட்புமனுக்களை நிராகரிக்க வாய்ப்புள்ளது'; வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை; புதிய குண்டை போடும் மம்தா..!
Seithipunal Tamil April 02, 2026 04:48 AM

கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதியன்று தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 05 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதேப்போன்று, மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 02 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 291 இடங்களில் போட்டியிடவிருக்கிறது. தொடர்ச்சியாக 04-வது முறை வெற்றியைத் தக்க வைக்கும் நோக்கில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் வேட்புமனுக்களை நிராகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டம், நானூர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி இன்று உரையாற்றும் போது இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது;

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் போது ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். சிறிய தவறு இருந்தாலும் புதிய அதிகாரிகள் உங்கள் மனுக்களை நிராகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் ஆணையத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு உங்கள் வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பாஜக மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், தேர்தல் நடைமுறைகளில் தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும்குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பல ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்தது. இந்தச் சூழலில், புதிய அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மம்தா பானர்ஜி பேசியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.