தவெக தலைவர் விஜய் நாளை வியாழக்கிழமை (02.04.2026) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரமும் மேற்கொள்ளவுள்ளார்.
தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இதற்காக பெரம்பூர் தொகுதியில் கடந்த 30ஆம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தான் போட்டியிடும் இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை (02ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் அவர் தேர்தல் பிரசாரமும் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி முன்னதாகவே தவெக நிர்வாகிகள் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கோரி அனுமதி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக தவெக தலைமையில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதை அனைவரும் அறிவீர்கள்.
''நாளை (02.04.2026, வியாழக்கிழமை) திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, கழகத் தலைவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் பிற தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் தலைவரின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது.
அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.'' எனத் தெரிவித்துள்ளார்.