அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதனை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை பிரச்சாரம் மேற்கொள்ள கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதால் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று சிவகங்கை மாவட்டம், அரண்மனை வாசல் பகுதியில் கூட்டணி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து இபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்த பின்னர் புதுக்கோட்டை அதிமுக வேட்பாளர் சி. விஜயபாஸ்கரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள புறப்பட்டுச் சென்றார்.
அதாவது, சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி எடப்பாடி பழனிசாமி சென்றுகொண்டிருந்தபோது, மதகுபட்டி அருகே அவரது பாதுகாப்பு வாகனம், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.