4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கிப் பாந்தது அமெரிக்காவின் 'ஆர்டெமிஸ் - 2' விண்கலம்!
Dinamaalai April 02, 2026 10:48 AM

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவு குறித்த ஆய்வில் தனது அடுத்தக்கட்டப் பயணத்தை இன்று அதிகாலை 5:47 மணிக்குத் தொடங்கியது. உலகின் மிகச் சக்திவாய்ந்த ராக்கெட்டான எஸ்எல்எஸ் மூலம், ஓரியன் விண்கலம் 4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கி ஏவப்பட்டது.

இந்த வரலாற்றுப் பயணத்தில் 3 அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா நாட்டு விண்வெளி வீரரும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒரு பெண் மற்றும் ஒரு கறுப்பின வீரர் முதன்முறையாக நிலவுப் பயணத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

1972-ல் அப்போலோ 17 திட்டத்திற்குப் பிறகு, மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் முதல் திட்டம் இதுவாகும். நிலவில் இதுவரை மனிதர்கள் கால் தடம் பதிக்காத துருவப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வதே இவர்களின் முக்கிய இலக்கு.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் எதிர்காலத் திட்டங்களுக்கான ஒரு முன்னோடிப் பயிற்சியாக இந்த நிலவுப் பயணம் அமையும். நிலவில் உள்ள கனிம வளங்கள் மற்றும் நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து, அங்கு மனிதர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான தளம் அமைப்பதே நாசாவின் நீண்ட காலத் திட்டம்.

இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்ததும், அடுத்த கட்டமாக 'ஆர்டெமிஸ் - 3' மூலம் மனிதர்களை நேரடியாக நிலவின் மேற்பரப்பில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் நிலவுப் போட்டியில் தீவிரமாக இருந்தன. தற்போது 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா இந்தப் பணியைக் கையில் எடுத்துள்ளது. இது விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.