ஐபிஎல் 2026 தொடருக்காகத் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் தோனி தனது கிரிக்கெட் கிட் பேக்கை இழுத்துக் கொண்டு நடந்து சென்றபோது, அங்கிருந்த நபர் ஒருவர் ஓடி வந்து “அந்தப் பையை நான் கொண்டு வருகிறேன்” என்று கேட்டுள்ளார்.
ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த தோனி, மிகவும் எளிமையாகத் தனது பையைத் தானே சுமந்து கொண்டு சென்றது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று டிரெண்டிங்காகி வருகிறது.
கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், தனக்கான வேலையைத் தானே செய்துகொள்ளும் தோனியின் இந்தத் தன்னலமற்ற குணம் மற்றும் எளிமைதான் அவரை இன்றும் ‘தல’யாகக் கொண்டாட வைக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பயிற்சியின் போது எடுக்கப்பட்ட இந்தச் சிறிய வீடியோ, தோனியின் ‘ரியல் மாஸ்’ என்ன என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது.