பாஜக ஆளும் மாநிலங்களை விட இங்கே குற்றங்கள் குறைவுதான்..! - பியூஷ் கோயலுக்கு கனிமொழி பதிலடி..!
Top Tamil News April 02, 2026 01:48 PM

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கனிமொழி கருணாநிதி திறந்து வைத்து, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவனை அவர் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் மேலும் கூறுகையில், "தூத்துக்குடியை பொறுத்தவரை கீதாஜீவன் வெற்றி வேட்பாளர். மக்கள் பணியை சிறப்பாக செய்பவர். அவருடைய பணிகளை பார்த்து நான் பலமுறை வியப்படைந்திருக்கிறேன்.

மேலும், திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான பல திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. எனவே, திமுக மறுபடியும் ஆட்சி அமைக்கப் போகிறது. நான் வியாழக்கிழமை மானாமதுரையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கின்றேன்" என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சண்முகையாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வேட்பாளர் அறிவிப்பின் போது சிலருக்கு கருத்து வேறுபாடுகள், மனத்தளர்வுகள் இருக்க தான் செய்யும். கூட்டணி பேச்சுவார்த்தையின் போதும் சர்ச்சைகள் உருவாகும். ஆனால் திமுகவினர் அனைவரும் கருத்தியலாக ஒன்றுபட வேண்டும். ஒன்றாக இணைந்து தேர்தல் பணியாற்றுவோம். வெற்றியை நோக்கி பணியாற்றுவோம். எந்த தொகுதியில் புதிய வேட்பாளரை அறிமுகப்படுத்தினாலும், அங்கு வருத்தம் இருந்தாலும் திமுக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடப்பதாக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையை விட தமிழ்நாட்டில் குறைவு தான். தமிழ்நாட்டில் குற்றம் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரக் கூடிய ஆட்சி நடைபெறுகிறது" என்று கனிமொழி கருணாநிதி பதில் அளித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.