அவர் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை…! அதான் 2 தொகுதியில் போட்டி… 4 முறை தோற்றாலும் மீண்டும் 100% முயற்சியோடு நான் போட்டியிடுகிறேன்.. போட்டு தாக்கிய சீமான்..!!
SeithiSolai Tamil April 02, 2026 01:48 PM

கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை இலக்கு வைத்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரசாரத்த,ன் போது சீமான் பேசியதாவதுஃ

ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக, தற்போது ஆட்சிக் காலம் முடியும் வேளையில் மக்களிடம் ‘உங்கள் கனவு என்ன?’ என்று கேட்கிறது. அப்படியானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு என்ன தேவை என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லையா? முதல்வர் ஸ்டாலின் உண்மையான நல்லாட்சியைத் தந்திருந்தால், மக்களே முன்வந்து ‘உங்கள் ஆட்சி தொடரட்டும்’ எனக் கூறியிருப்பார்கள். அதை அவர்களாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கிறோம் என்கிறார்கள். இத்தனை காலம் ஆட்சி செய்தவர்களுக்கு மக்களின் குறைகள் என்னவென்றே தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

மக்களையும், தன்னையும் நம்பாதவர்கள் தான் பாதுகாப்பிற்காக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்கள். நான் இரண்டு முறை தேர்தலில் தோல்வியைத் தழுவிய போதிலும், மக்கள் மீதுள்ள நம்பிக்கையாலும், என் மீதுள்ள நம்பிக்கையாலும் தொடர்ந்து ஒரே தொகுதியில் மட்டுமே களம் காண்கிறேன். கான்ஃபிடன்ட்டா இருக்கணும்னு விஜய் சொல்லும் நிலையில் அவர் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

நாங்கள் எப்போதும் தனித்தே பயணிக்கிறோம். இலக்கை நோக்கி உறுதியாகச் செல்கிறோம். நான்கு முறை பொதுத்தேர்தலில் தோல்வியுற்ற போதிலும், சோர்வடையாமல் மீண்டும் மீண்டும் உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறோம். நாங்கள் 100 சதவீதம் மக்களை நேசிக்கிறோம்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவும், திமுகவும் தான் அதிக அளவில் பணம் பெற்றுள்ளன. ஆனால், ஒரு ரூபாய் கூட வாங்காத நேர்மையான கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே திகழ்கிறது என்று கூறினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.