ஸ்ரீதேவி, பூதேவி, சுந்தரவல்லி, ஆண்டாள்... 4 பிராட்டிமார்களை மணந்தார் கள்ளழகர் - அழகர் கோவிலில் கல்யாண வைபோகம்!
Dinamaalai April 02, 2026 10:48 AM

மதுரை அழகர் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத் திருவிழா வைபவத்தையொட்டி கள்ளழகர் மற்றும் பிராட்டிமார்களுக்குக் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தினமும் உற்சவர் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சகல பரிவாரங்களுடன் புறப்பாடாகி, ஆடி வீதிகள் வழியாக வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

மண்டபத்தில் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமிக்கும் தாயார்களுக்கும் சிறப்புத் தீபாராதனைகள் காட்டப்பட்டன. இரவு சுவாமி மீண்டும் இருப்பிடம் சென்றடைந்தார். இந்நிலையில் நேற்று காலை 9 மணி முதல் 9:20 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மங்கள இசை முழங்க, பெரியாழ்வார் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய நான்கு பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில் கள்ளழகர் பெருமாள் மணந்துக் கொண்டார்.  இந்தத் திருக்காட்சியைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் கோவிலில் திரண்டு தரிசனம் செய்தனர். 

நாளை ஏப்ரல் 2ம் தேதிமஞ்சள் நீர் சாற்று முறையுடன் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாணப் பெருவிழா நிறைவு பெறுகிறது. பக்தர்களின் வசதிக்காகக் கோவிலில் கூடுதல் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அழகர் கோவிலுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்துள்ளதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.