தமிழகத்தில் நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் நிராகரித்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதில், “அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, அவருக்குத் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரித்தது செல்லாது என்றும், அமைச்சரவை எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.