மயிலாடுதுறை: சீட் கிடைக்காதவர்கள் துரோகம் செய்கிறார்கள் - மதன் குற்றச்சாட்டு!
எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை April 03, 2026 03:44 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவால் அனைத்துப் பலன்களையும் அனுபவித்தவர்களே, தற்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கட்சிப் பொறுப்புகளைத் துறந்துவிட்டு, தலைமைக்கு எதிராகக் அவதூறுகளைப் பரப்பி வருவதாக அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மதன் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நிர்வாகிகள் ராஜினாமாவும் பின்னணியும்

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் தற்போது நாளுக்கு நாள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் பாரதி, முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் மற்றும் அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர், கட்சியில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் கூறி அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் மற்றும் மண்டலப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து அவர்கள் வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாய்ப்பு கிடைக்காததால் வந்த கோபம்

இது குறித்து மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் மதன் கூறுகையில்; "மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் பூம்புகார் மற்றும் சீர்காழி தொகுதிகளில் அதிமுகவும், மயிலாடுதுறை தொகுதி பாமகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியை பாமகவிற்கு ஒதுக்கியது மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோரின் சதி என்று சிலர் தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர். கடந்த முறையும் இந்தத் தொகுதி கூட்டணிக்கே ஒதுக்கப்பட்டது. இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று மாவட்டத் தலைமை கடும் போராட்டங்களை நடத்தியது உண்மை. ஆனால், கூட்டணி கட்சிகளின் பிடிவாதத்தாலும், தலைமை எடுத்த முடிவின் அடிப்படையிலுமே தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகத்தின் மீது பழி போடுவது முறையல்ல."

பதவிகளை அனுபவித்துவிட்டு துரோகம்

தொடர்ந்து பேசிய அவர், ராஜினாமா செய்த நிர்வாகிகளின் கடந்த கால வரலாற்றைச் சுட்டிக்காட்டினார்: "சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ. பாரதிக்கு அதிமுக தலைமை மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. 2011-ல் ஒன்றியக் குழுத் தலைவர் பதவியையும், 2016-ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் கட்சி அவருக்குக் கொடுத்தது. இத்தனை வாய்ப்புகளைப் பெற்று அனுபவித்தவர், இந்த முறை சீட் கிடைக்கவில்லை என்றவுடன் கட்சியைத் துரோகி என்கிறார். கடந்த 2001-ல் சந்திரமோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு கொடிக்கம்பங்களைச் சேதப்படுத்திய வரலாறும் இவருக்கு உண்டு.

அதேபோல் வி.ஜி.கே. செந்தில்நாதன் குறித்துப் பேசுகையில், "அம்மா பேரவைச் செயலாளர், நகரச் செயலாளர், ஊராட்சி மன்றத் தலைவர், கூட்டுறவு வங்கிச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் என அடுத்தடுத்த உயர் பதவிகளை அதிமுக இயக்கம் அவருக்கு வழங்கியது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் கொடுத்த நெருக்கடிகள் எங்களுக்குத்தான் தெரியும். இயக்கத்திற்கு உண்மையாக இருப்பதாகக் கூறும் செந்தில்நாதன், ரகசியமாக பூம்புகார் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டுப் பார்த்தார். அது கிடைக்காத விரக்தியிலேயே இப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் குறை கூறுகிறார்," என்றார்.

ஆதாரமற்ற புகார்கள்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மீது நிதி மோசடி புகார் கூறிய ஜனார்த்தனன் குறித்தும் மதன் பதிலடி கொடுத்தார். "முன்னாள் அமைச்சர் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் திருப்பித் தரவில்லை என்று ஜனார்த்தனன் கூறுவது முற்றிலும் பொய்யானது. இதற்கான எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை. வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய கீழ்த்தரமான புகார்களை அவர் சுமத்துகிறார்," என்று குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும்

"அதிமுக யாரையும் எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை. இவர்களாகவே தங்களது மரியாதையைக் குறைத்துக் கொண்டுள்ளனர். தோல்வியைத் தழுவும் வேட்பாளர்களை மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளதாக செந்தில்நாதன் கூறுவதற்கு வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தகுந்த விடை கிடைக்கும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை," என்று மதன் உறுதியாகத் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் நோக்கர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. இச்சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.