உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி – கஜுராஹோ நெடுஞ்சாலையில் உள்ள லுகாரி டோல் பிளாசாவில் இளம்பெண் ஒருவர் செய்த ‘ஹை-வோல்டேஜ்’ கலாட்டா தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தனது மொபைல் போன் திருடு போனதால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், டோல் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்தார்.
மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், டோல் பிளாசாவில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த மோதலின் உச்சகட்டமாக, அங்கிருந்த டோல் கேட் பாரிகேடு (Boom Barrier)-ஐ அந்தப் பெண் பலவந்தமாக உடைத்தெறிந்தார். இதனால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்தப் பெண் செய்த ரகளைகள் அனைத்தும் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதை தலைக்கேறி பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்தப் பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.