காங்கிரஸ் – திமுக ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடி… உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் தாக்கு!
TV9 Tamil News April 06, 2026 09:48 PM

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏப்ரல் 6- ஆம் தேதி ( திங்கள்கிழமை) பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிறிய மாநிலத்தில் வெற்றி பெற்றதை பெரிதாக கூறுகிறீர்களே என்று எள்ளி நகையாடினார். புதுச்சேரியின் வெற்றி பாரதத்தின் வெற்றிக்கு மிக மிக அவசியமானதாகும். கடந்த 5 கால புதுச்சேரி மாநில வளர்ச்சியில் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பிரதமர் மோடி அனுப்பியதற்கு பின்னால் நமச்சிவாயத்தின் உழைப்பு இருந்தது. திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நமச்சிவாயம் தான் காரணம்.

இண்டி கூட்டணியில் ஆட்சி மற்றும் பதவிக்காக போட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகள் ஒற்றுமையுடன் இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். ஆனால், இண்டி கூட்டணியில் ஒருவருக்கொருவர் ஆட்சிக்காகவும், பதவிக்காகவும் சண்டை போட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் இருந்து இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதே போல, திமுக மற்றும் காங்கிரஸ் 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் என். ஆர். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை ஒற்றுமையுடன் உள்ளன.

மேலும் படிக்க: Singanallur Constituency Election 2026: கோவையில் அமைந்திருக்கும் சிங்காநல்லூர் தொகுதி.. திமுக vs அதிமுக.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?

திமுக-காங்கிரஸ் ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு ஊழல்

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் மட்டுமே நிகழ்ந்துள்ளது. மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீட்டில் வழங்கக்கூடிய சீட்டுகளை கூவி கூவி விற்பனை செய்துள்ளனர். பட்டியலின சமுதாயத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களை கூட வழங்கவில்லை. இந்த இடங்கள் அனைத்தும் லஞ்சத்துக்காக விலை பேசப்பட்டன. காங்கிரஸ் கட்சியும், திமுகவும் சென்டாக் என்ற திட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15,000 கோடி ஊழல் ரூபாய் மூலமாக புதுச்சேரி மாநிலத்துக்கான 3 ஆண்டுகால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கலாம்.

என்டிஏ ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் குறைவு

காங்கிரஸ்- திமுக ஆட்சி காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் 47 சதவீதம் உயர்ந்திருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையில்லா திண்டாட்டம் குறைக்கப்பட்டு 47 சதவீதம் வெறும் 4.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி நேசித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானில் தான் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகரிக்கவில்லை. புதுச்சேரியை தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு உறுதிப்பூண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய மேம்பாலம்.. நள்ளிரவில் பொது மக்கள் பதறியடித்து ஓட்டம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.