வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக அமைச்சர் துரைமுருகன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்து விவரங்களைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, அமைச்சர் துரைமுருகனுக்குச் சொந்தமாக ₹11.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் அமைச்சரை விட பல மடங்கு அதிகமாக, அதாவது ₹59 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் அவரது மனைவி பெயரில் மொத்தம் ₹30.8 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்த நிலையில், தற்போது ஐந்தே ஆண்டுகளில் அவர்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமைச்சரின் பிரமாணப் பத்திரத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு முறைப்படி கணக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதியில் நீண்டகாலமாக கோலோச்சி வரும் துரைமுருகனின் இந்தச் சொத்து உயர்வு விவரங்கள், தேர்தல் களத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.