பிரபல நடிகரும், இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன், மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் .
இவர், ஃபோட்டான் கதாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். அந்த நிறுவனம், கடந்த 2013- 2014-ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் வருமான வரித்துறை கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளுக்கான எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023-ம் ஆண்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த 2011-ம் ஆண்டே ஃபோட்டான் கதாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து விலகி விட்டார் என்று வாதிட்டார்.
மேலும், கௌதம் வாசுதேவ் மேனன் பதவி விலகல் குறித்து முறையாக கம்பெனிகள் பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், 2013-14ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே.ஜி. இளந்திரையன், குறிப்பிட்ட நிதியாண்டுக்கு முன்பே இயக்குநர் பதவியில் இருந்து கௌதம் வாசுதேவ் மேனன் விலகி விட்ட நிலையில், அதன் பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி, வருமான வரித் துறையின் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதே சமயம், அந்த நிறுவனத்தின் மற்ற இயக்குநர்களுக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்கும்படி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.