மதுரை தெற்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் கடைசி நேரத்தில் அதிரடியாக மாற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பட்டியலில் ஜோ.பீட்டர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கியிருந்தார். ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, அவருக்குப் பதிலாக மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.கோபிசன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்தார்.
கட்சியில் ஆரம்பம் முதலே பணியாற்றி வரும் தனக்கு ‘சீனியாரிட்டி’ அடிப்படையில் வாய்ப்பளிக்க வேண்டும் என கோபிசன் வைத்த கோரிக்கையை ஏற்று, கட்சி தலைமை இந்த மாற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்த கோபிசன், பின்னர் டி.எம்.சௌந்தரராஜன் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட இந்தச் சம்பவம் மதுரையில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.