ஒரே இரவில் ஈரான் சிதறும்...? இன்று இரவே அந்த தாக்குதல் நிகழ சாத்தியம் இருக்கு ...! - டிரம்ப் அதிரடி எச்சரிக்கை
Seithipunal Tamil April 07, 2026 05:48 PM

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் பின்னர், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தீவிரமடைந்து, அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அரபிக்கடலில் முக்கியமான வர்த்தக பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு செல்ல வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல்கள் தடைபட்டு, சர்வதேச சந்தையில் எண்ணெய் வழங்கலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து, பல நாடுகளில் சமையல் எரிவாயு பற்றாக்குறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற கடுமையான விளைவுகள் உருவாகியுள்ளன.இதற்கிடையில், போரை உடனடியாக நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்கா சார்பில் ஈரானுக்கு கடும் காலக்கெடு விதிக்கப்பட்டது.

ஆனால், அந்த எச்சரிக்கையை ஈரான் நிராகரித்தது. இது குறித்து எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் கூறுகையில், “எந்த உத்தரவாதமும் இல்லாமல் வெறும் போர்நிறுத்தத்தை எங்கள் நாடு ஏற்காது; இனி மீண்டும் தாக்குதல் நடைபெறாது என்ற உறுதிப்பாட்டுடன் மட்டுமே அமைதி ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்க ராணுவ வீரர் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை கொண்டாட இங்கு கூடியுள்ளோம். தேவையெனில், ஒரு இரவிலேயே ஈரான் நாட்டை முற்றிலும் அழிக்கும் திறன் எங்களிடம் உள்ளது; அந்த இரவு இன்று கூட இருக்கலாம்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது; ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானில் மின் நிலையங்களே இருக்காது” என அவர் முன்பே மிரட்டல் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.