லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
க.சே.ரமணி பிரபா தேவி April 07, 2026 07:14 PM

கிடைக்கணும்னா கூரையப் பிச்சுக்கிட்டு கொட்டும் என்பார்கள். அதிர்ஷ்டம் எந்த ரூபத்தில், எந்தப் பக்கமிருந்து வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு கேரளாவில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வே சாட்சி. நடந்தது என்ன?

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு லாட்டரி சீட்டு, ஒரு மூதாட்டியை ஒரே நாளில் லட்சாதிபதியாக மாற்றியுள்ளது.

காருண்யா லாட்டரி சீட்டு

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சு அச்சம்மா. இவருக்கு அவ்வப்போது கேரள அரசின் லாட்டரிச் சீட்டுகளை வாங்கும் பழக்கம் உண்டு. வழக்கம்போல சமீபத்தில் காருண்யா லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இதில் குலுக்கல் முடிவுகள் வெளியானதும், செய்தித் தாளோடு தனது லாட்டரி எண்களை ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்.

ஒரு டிக்கெட்டுக்கு 5 ஆயிரம் ஆறுதல் பரிசு கிடைத்து இருந்தது. இன்னொரு டிக்கெட்டுக்குப் பரிசு எதுவும் விழவில்லை என்று நினைத்து ஏமாற்றமடைந்தார். இதனால் விரக்தியடைந்த குஞ்சு அச்சம்மா, அந்த லாட்டரி சீட்டைக் கசக்கி வீட்டில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார்.

காத்திருந்த இன்ப அதிர்ச்சி

ஆனால், அன்றைய தினமே அவருக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சற்று நேரம் கழித்து அச்சம்மாவின் சகோதரர் முதல் பரிசு குறித்து தொலைபேசியில் அழைத்துக் கூறினார்.

அதில், குப்பைத் தொட்டியில் அச்சம்மா வீசிய அதே லாட்டரி சீட்டுக்குத்தான் முதல் பரிசு ரூ.1 கோடி விழுந்த உண்மை தெரியவந்தது. இதைக் கேட்டுப் பதறிப்போன அச்சம்மா, அவசரம் அவசரமாகக் குப்பைத் தொட்டியைக் கிளறி, தான் வீசிய லாட்டரி சீட்டைப் பத்திரமாக மீட்டெடுத்தார்.

டபுள் ஜாக்பாட்

ஒரே நாளில் அவருக்கு அடித்த இந்த டபுள் ஜாக்பாட் அதிர்ஷ்டம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குப்பையில் விழுந்த அதிர்ஷ்டம், இப்போது அவர் வாழ்க்கையை குபேரன் ஆக்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.