நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயிடம் 30 வருடங்களுக்கு மேல் மேனேஜராக பணிபுரிந்தவர் பிடி செல்வகுமார். சில வருடங்களுக்கு முன்பு விஜய்யிடமிருந்து வெளியேறிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதன்பின் விஜயை தாக்கி தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தார்..
விஜய் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்.. விஜய் ஒரு சுயநலவாதி.. அவரிடம் பல வருடங்கள் வேலை செய்த பலருக்கும் அவர் எந்த உதவியும் செய்தது இல்லை. 30 வருடங்கள் பணிபுரிந்துவிட்டு வெளியே சென்ற எனக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அப்பாவை மதிக்க மாட்டார்.. குழந்தைகளை, மனைவி பற்றி எந்த கவலையும் படமாட்டார்’ என்றெல்லாம் விஜயை பற்றி பேசிவந்தார்.
இந்நிலையில், திடீரென திமுகவிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்திருக்கிறார்.. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட அவருக்கு சீட் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. செய்தியாளர்களை சந்தித்த பிடி செல்வகுமார் ‘திமுகவில் வாரிசுகளுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் மட்டுமே சீட் கொடுக்கப்படுகிறது.. ஏதோ சதி நடந்து விட்டது.. என்னை ஒதுக்கி விட்டார்கள்’ என கூறினார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ‘கலப்பை மக்கள் இயக்கம் என்கிற அமைப்பு மூலம் குமரி மக்களுக்கு சேவை செய்து வந்தேன்.. திமுக மூலம் அங்கீகார கிடைக்கும் பட்சத்தில் மேலும் நல்ல செயல் திட்டங்களை செய்யலாம் என திட்டமிட்டிருந்தேன்.. காலம் எனக்கு அதிகாரம் கொடுப்பதை தள்ளிப் போடுகிறது.. எனவே திமுகவிலிருந்து விலகி மீண்டும் எனது பணியை தொடர விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.