பாக்கெட் மாவு தோசையால் 2 குழந்தைகள் உயிரிழப்பா? - தீவிர சிகிச்சையில் பெற்றோர்... என்ன நடந்தது?
Vikatan April 07, 2026 09:48 PM

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடையில் தோசை மாவு வாங்கி சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கன்ஷ்யாம் டைரி என்ற கடையில் ரெடிமேட் தோசை மாவை வாங்கிச் சென்றுள்ளார். அன்றிரவு அந்த மாவில் தோசை தயாரித்துச் சாப்பிட்ட விமல் குமார், அவர் மனைவி பாவனா மற்றும் மூத்த மகள் மிஷ்டி ஆகியோருக்கு அடுத்த நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் மூன்று மாதக் குழந்தையான ராஹா, தோசை சாப்பிடவில்லை என்றாலும், மாவைச் சாப்பிட்ட தனது தாயின் தாய்ப்பாலைக் குடித்த உடனேயே உடல்நிலை மோசமடைந்தது.

குஜராத் போலீஸ்

பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி அன்று மூன்று மாதக் குழந்தை ராஹா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 5-ம் தேதி அன்று நான்கு வயது சிறுமி மிஷ்டியும் உயிரிழந்தாள். ஒரே வாரத்தில் இரண்டு குழந்தைகளை இழந்த அக்குடும்பம் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. தற்போது குழந்தைகளின் பெற்றோர் இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து விமல் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் 'காஷ்யாம் டைரி' கடை மீது புகார் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. இதற்கிடையில், தற்போது மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியவும், உடலில் நச்சுத்தன்மை கலந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும், தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில், மூன்று மாதக் குழந்தையான ரஹாவின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குஜராத் போலீஸ்

இந்த வழக்கு தொடர்பாக சந்த்கேடா காவல் நிலைய ஆய்வாளர் ஜே.கே. மக்வானா, ``முதற்கட்ட விசாரணையில் ஏப்ரல் 1-ம் தேதி வாங்கப்பட்ட மாவே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தற்போது விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையினர் கன்ஷ்யாம் டைரி கடையிலிருந்து பல்வேறு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். தடயவியல் அறிவியல் ஆய்வக அறிக்கை வந்த பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கடை உரிமையாளர், ``சம்பவத்தன்று நான் விமலுக்கு மட்டும் மாவு விற்பனை செய்யவில்லை. நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர். மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை. நாங்கள் தரமான பொருள்களையே விற்பனை செய்கிறோம்." என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.