ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் போட்டியில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் குவஹாத்தியில் உள்ள பர்சபாரா மைதானத்தின் மீது படிந்துள்ளது.
இந்தப் போட்டி பெயரளவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயானது என்றாலும், ரசிகர்களின் மெயின் போக்கஸ் என்னவோ ‘யார்க்கர் கிங்’ ஜஸ்பிரித் பும்ரா மற்றும் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி இடையிலான பலப்பரீட்சை தான்.
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் பும்ராவையே மிரட்ட வைபவ் தயாராகிவிட்டார் எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம், குவஹாத்தி மைதானத்தின் தட்டையான ஆடுகளம் தான். பந்துகள் அதிகம் ஸ்விங் ஆக வாய்ப்பில்லாத இந்த பிட்ச்சில், வைபவ் தனது அதிரடி பாணியில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் மழையைப் பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டிய வைபவ், பும்ராவின் அனுபவத்தையும் தனது அசாத்திய வேகமான பேட் ஸ்விங் (Bat Swing) மூலம் முறியடிக்கக் காத்திருக்கிறார்.
சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டம் குறித்துப் பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங், வைபவின் பேட்டிங் வேகம் தன்னையே மிஞ்சும் வகையில் இருப்பதாகப் பாராட்டியுள்ளார். எந்த ஒரு பந்துவீச்சாளரையும் கண்டு அஞ்சாத வைபவ், பந்தின் வேகத்தை மட்டுமே கணக்கில் கொண்டு விளையாடுவது அவருக்குப் பெரும் சாதகமாக உள்ளது.
பும்ராவிடம் பல வித்தைகள் இருந்தாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தைக் கணித்து ஆஃப் சைடு மற்றும் லெக் சைடு என இருபுறமும் சிதறடிக்கும் வைபவின் ‘ஹேண்ட்-ஐ கோஆர்டினேஷன்’ (Hand-Eye Coordination) இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக அமையும் எனத் தெரிகிறது.
அனுபவமா அல்லது இளமையின் வேகமா? என்ற கேள்விக்கு விடை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.